செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அய்மன் ஜமால், செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்தார்.
சட்டம்-ஒழுங்கு நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த ஆய்வின் போது, பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்ற எஸ்.பி. அய்மன் ஜமால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களை சந்தித்து பேசினார்.
குறிப்பாக, அப்பகுதிகளில் ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளதா, பொதுமக்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு பிரச்சினைகள் உள்ளனவா என்பது குறித்து தகவல்களை சேகரித்தார். மேலும், காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
இதனுடன், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணிகள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் காவல் சேவைகள், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தெரிவித்த கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை கவனமாக கேட்டுக் கொண்ட எஸ்.பி., மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் என உறுதியளித்தார்.
இந்த ஆய்வு நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது





