செங்கல்பட்டு மாவட்டத்தில் 2026-2027 கல்வியாண்டை முன்னிட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் விநியோகம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாவட்ட கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள் முன்கூட்டியே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 65 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 81 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 20 அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 21 அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 187 பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 85 பள்ளிகளுக்கு கல்வி பொருட்கள் வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள பள்ளிகளுக்கும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவருட்செல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிகள் திறக்கும் முன்பே அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் மாணவர்கள் புதிய கல்வியாண்டை எந்த தாமதமும் இன்றி தொடங்க வசதி ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.





