பாதுகாக்கப்பட வேண்டிய இடத்திலேயே உயிருக்கு ஆபத்து: வண்டலூர் பூங்கா மான்களின் பரிதாப நிலை!

0
1

ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகக் கருதப்படும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், நிர்வாகத்தின் மெத்தனப் போக்கினால் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் அவலம் அரங்கேறி வருகிறது. விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய இடத்திலேயே அவற்றுக்கு நேர்ந்துள்ள இந்தச் சோகம் வன ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வண்டலூர் பூங்கா வளாகத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் ஏராளமான மான்கள், பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வீசிச் செல்லும் பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் டீ கப்புகளை உண்ணும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

பூங்காவில் உள்ள குப்பைத் தொட்டிகள் முறையாக மூடப்படாமலும், உரிய நேரத்தில் சுத்தம் செய்யப்படாமலும் இருப்பதால், மான்கள் அந்தத் தொட்டிகளைக் கீழே தள்ளி அதில் உள்ள கழிவுகளை உண்ணுகின்றன.

மான்கள் பிளாஸ்டிக் உண்பதை அங்கிருக்கும் பராமரிப்புப் பணியாளர்கள் கண்டும் காணாமல் இருப்பது நிர்வாகத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது எனப் பார்வையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகள் மான்களின் குடலில் தங்கி செரிமானத்தைப் பாதிப்பதோடு, ஏற்கனவே பூங்காவிற்கு வெளியே குப்பைகளைத் தின்று பல மான்கள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது பூங்கா உட்பகுதியிலேயே இச்சம்பவம் நடப்பது வேதனையளிக்கிறது.

180 வகையான 2,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வரும் வண்டலூரில், பிளாஸ்டிக் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வளவு பிளாஸ்டிக் கழிவுகள் எங்கிருந்து வருகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. பூங்காவில் உரிமம் பெற்று நடத்தப்படும் கடைகளைச் சுற்றிச் சிதறிக் கிடக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த ஊழியர்கள் தவறிவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

விலங்குகளைப் பாதுகாப்போம் என்ற வாசகம் வெறும் பதாகைகளுடன் நின்றுவிடாமல் செயல்பாடாக மாற வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். பூங்கா நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தாத கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் இல்லா வண்டலூர் பூங்காவை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.