பாலாற்றில் இறைச்சி, குப்பைகள் கொட்டும் அவலம்

0
10

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாயும் பாலாற்று பகுதியில் இறைச்சி மற்றும் குப்பை கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருவதால் கடும் சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். இந்த பிரச்சினையை கண்காணிக்க வேண்டிய உள்ளாட்சி நிர்வாகமும், நீர்வளத்துறை அதிகாரிகளும் அலட்சியம் காட்டி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் தொடங்கி ஆந்திரா வழியாக தமிழகத்திற்குள் நுழையும் பாலாறு, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் வழியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் கல்பாக்கம் அருகிலுள்ள வாயலூர் பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. மழைக்காலங்களில் கரைபுரண்டு ஓடும் இந்த ஆற்றின் நீர், விவசாய பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, தாம்பரம், பல்லாவரம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாலாற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பாலூரில் கட்டப்பட்ட நீர் செறிவூட்டும் தடுப்பணை காரணமாக இப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து, குடிநீர் பிரச்சினை குறைந்துள்ளது. மேலும், பாலூர், வில்லியம் பாக்கம், சாத்தனஞ்சேரி, சீத்தனஞ்சேரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயமும் பாலாற்றை நம்பியே நடைபெற்று வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பாலாற்று தற்போது குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளால் மாசுபட்டு வருவது கவலைக்குரியதாக உள்ளது. சென்னை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே மற்றும் செங்கல்பட்டு–காஞ்சிபுரம் சாலையோர பாலாற்றங்கரை பகுதிகளில் இறைச்சி விற்பனையாளர்கள் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

மேலும், மருத்துவ கழிவுகள் உட்பட பல்வேறு குப்பைகள் பாலாற்றில் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

இந்த பிரச்சினையைத் தடுக்க நீர்வளத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், “பாலாற்றில் குப்பை கொட்ட வேண்டாம் என உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

எனினும், நிலைமைக்கு தீர்வு காண துரிதமான நடவடிக்கை அவசியம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.