செங்கல்பட்டு அருகே விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல், கொள்முதல் நிலையங்களிலேயே விவசாயிகள் இரவு பகலாகத் தவம் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வில்லியம்பாக்கம் மற்றும் சாஸ்தரம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
செங்கல்பட்டைச் சுற்றியுள்ள பாலூர், ஆத்தூர், திம்மாவரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் வாழ்வாதாரமான நெல்மணிகளை இங்குள்ள கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக அதிகாரிகள் நெல்லைக் கொள்முதல் செய்யாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். ஒருபுறம் கோணிப்பைகள் இல்லை என்றும், மறுபுறம் ஆட்கள் இல்லை என்றும் சாக்குப்போக்கு கூறி அதிகாரிகள் தட்டிக்கழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே கொள்முதல் செய்வோம் என அதிகாரிகள் வெளிப்படையாகவே லஞ்சம் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வரும் இம்மக்கள், வட்டிக்குக் கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் பயிர் செய்துள்ளனர். “தங்கம் விலை உயர்ந்து வரும் சூழலில், அடகு வைத்த நகையை மீட்க முடியாமல் வட்டி கட்டவே திணறி வருகிறோம்” என அவர்கள் கண்ணீர் மல்கக் கூறுகின்றனர்.
இரவு நேரங்களில் கொசுக்கடி, பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நெல் மூட்டைகளுக்குக் காவல் இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு மழையில் நனைந்து நெல் வீணானதைப் போல, இந்த ஆண்டும் மழையில் சிக்கித் தங்களின் உழைப்பு பாழாகிவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை விரைவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





