Home செங்கல்பட்டு செங்கல்பட்டில் 400 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

செங்கல்பட்டில் 400 கிலோ குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

0

செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த செங்கல்பட்டு நகர போலீசார், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது ஸ்கூட்டரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செங்கல்பட்டு அடுத்த நெம்மேலி சாய் லட்சுமி நகரைச் சேர்ந்த கணேசன் (46) என்பது தெரியவந்தது.

மேலும், இந்த குட்கா பொருட்களை எங்கிருந்து வாங்கி விற்பனை செய்து வந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். அதில், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து குட்கா பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்ததாக கணேசன் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து போலீசார் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது ஹான்ஸ், சிம்லா, கூல்-லிப் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 400 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து, கணேசன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

Exit mobile version