செங்கல்பட்டு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவரை கைது செய்த போலீசார், இருவரிடமிருந்தும் மொத்தம் 251 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்கா பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யாருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தாம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரும் திருநீர்மலை சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ததில், 170 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கஞ்சா பொதிகளும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பாலா வருஷலா பாபு (35), காலா சத்திய நாராயணா (29), சேனாபதி துர்கா பிரசாத் (24), வெங்கலா துர்கா பிரசாத் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தலை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்களும் அதற்கான ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன.
