செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் தலைமையில் இன்று (மே 22) காலை 10.30 மணியளவில் விவசாயிகள் நலக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தியாகராஜன் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தங்களது குறைகள் மற்றும் தேவைகளை மனுக்களாக வழங்கினர். குறிப்பாக பாசன வசதி, மின்சாரம், உரம் மற்றும் விதை கிடைப்பது, சாலை வசதி, கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விவசாயிகளின் பிரச்சினைகளை நேரில் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், விவசாயிகளின் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் வேளாண்மைத் துறை அதிகாரிகள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் மூலம் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
