செங்கல்பட்டு மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக புதுப்பிக்கப்பட்ட நவீன நூலகப் பிரிவு, மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ்.மாலதி ஹெலன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், மாவட்ட நூலகர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் இந்த புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அமைதியான சூழலில் அமர்ந்து படிக்கும் வசதி, போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு புத்தகங்கள், குறிப்பேடுகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இங்கு மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள், வங்கி தேர்வுகள், ரயில்வே, UPSC, TNPSC உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி புத்தகங்களும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதிகள் மூலம் செங்கல்பட்டு மாவட்ட மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் TN Private Jobs Portal தொடர்பான தகவல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் மேம்படுத்தப்பட்ட சேவைகள் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என பொதுமக்கள் பாராட்டினர்.