பக்ரீத் பண்டிகை : செங்கல்பட்டில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

0
6

ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செங்கல்பட்டில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கொண்டாடும் முக்கிய திருநாள்களில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று உற்சாகமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நபி இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த ஈகைத் திருநாள், இறை நம்பிக்கை, தியாகம் மற்றும் மனிதநேயம் ஆகிய உயரிய பண்புகளை எடுத்துரைக்கும் நாளாக கருதப்படுகிறது.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்படும் இந்த நாளில், அதிகாலை முதலே முஸ்லிம்கள் பள்ளிவாசல்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் திரண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு இறைவனை தொழுதனர்.

தொழுகைக்குப் பின்னர், ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்ட இஸ்லாமியர்கள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கியும் ஈகைத் திருநாளை கொண்டாடினர். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் அமைதியான மற்றும் ஆன்மிக நிறைந்த சூழல் நிலவியது.