Home Trending/Viral மொத்தமாக மூடுங்கள்: டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

மொத்தமாக மூடுங்கள்: டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

0

தமிழகத்தில் கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலுள்ள 717 மதுபானக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், “சில கடைகளை மட்டும் மூடுவதற்குப் பதிலாகத் தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்” என்று மதுபான பார் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் நலச் சங்கத்தினர் அதிரடி யோசனை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு, பள்ளிகள் மற்றும் கோவில்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. ஆனால், மாநகராட்சிகளில் 50 மீட்டரும், இதர பகுதிகளில் 100 மீட்டரும் இடைவெளி இருந்தால் போதும் என உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், தமிழக அரசின் இந்த 500 மீட்டர் விதிமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். “500 அடி என்பது தவறுதலாக 500 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளதா?” என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாகச் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் பொது மேலாளர் நந்தகுமாரைச் சந்தித்துச் சங்கத்தினர் மனு அளித்தனர். “மதுபானக் கடைகள் மற்றும் பார்களில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளோம். அரசின் இந்தத் திடீர் உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், இதனைச் செயல்படுத்த போதிய கால அவகாசம் வேண்டும்,” எனப் பார் உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகக் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டிய சங்கத்தினர், குறைந்த ஊதியம் காரணமாகவே பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கும் நிலை உருவானதாகத் தெரிவித்தனர். கடைகளை மூடும்போது ஊழியர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சங்கப் பிரதிநிதிகள் திருநாவுக்கரசு மற்றும் அன்பரசன், “சில கடைகளைத் தேடிப் பிடித்து மூடுவதற்குப் பதிலாக, அரசு கொள்கை முடிவெடுத்துத் தமிழ்நாடு முழுவதுமே மதுக்கடைகளை மூடிப் பூரண மதுவிலக்கைக் கொண்டு வரலாம். அதை விடுத்து, உரிய உரிமத்துடன் இயங்கும் கடைகளைத் திடீரென மூடுவது முறையாகாது,” எனத் தெரிவித்தனர்.

அரசின் 500 மீட்டர் விதிமுறை மதுக்கடை உரிமையாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் இது குறித்து என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version