தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியான பிரசாந்த் உட்பட மூன்று பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் (Goondas Act) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், சென்னையில் உள்ள ஒரு எடிட்டிங் ஸ்டுடியோவில் ஃப்ரீலான்ஸ் உதவி எடிட்டராகப் பணியாற்றிய பிரசாந்த் என்பவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் படத்தின் காட்சிகளைத் திருட்டுத்தனமாகத் தனது ஹார்ட் டிரைவில் (Hard Drive) பதிவிறக்கம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருடப்பட்ட காட்சிகளைத் தனது சகோதரர்கள் மற்றும் நண்பர்களான செல்வம், பாலா ஆகியோருக்குப் பிரசாந்த் பகிர்ந்துள்ளார். அவர்கள் அதனைப் பல்வேறு சமூக வலைதளங்கள் மற்றும் ‘கிளவுட் ஸ்டோரேஜ்’ (Cloud Storage) தளங்களில் பதிவேற்றியது விசாரணையில் உறுதியானது. இந்தச் செயலால் தயாரிப்பு நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதோடு, படத்தின் ரகசியமும் கசிந்தது.
இந்த வழக்கின் தீவிரத்தைக் கருதி, கைதான பிரசாந்த், செல்வம் மற்றும் பாலா ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யச் சைபர் கிரைம் போலீசார் பரிந்துரைத்தனர். இதனை ஏற்று, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுத் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திரைப்படங்களைத் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுபவர்கள் மற்றும் அதனைப் பரப்புபவர்கள் மீது இனிவரும் காலங்களிலும் இத்தகைய கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு காவல்துறை எச்சரித்துள்ளது. முன்னதாக, இந்தப் படத்தின் காட்சிகளைத் திரையிட்ட கோயம்புத்தூர் கேபிள் டிவி ஆபரேட்டர் ஒருவரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
