Home செங்கல்பட்டு ஆயப்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து பாதிப்பு… ஆட்சியர் அதிரடி உத்தரவு

ஆயப்பாக்கம் ஏரிகளுக்கு நீர் வரத்து பாதிப்பு… ஆட்சியர் அதிரடி உத்தரவு

0

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள ஆயப்பாக்கம் கிராம விவசாயிகள், ஏரிகளுக்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் உபரிநீர் வடிகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனிடம் மனு அளித்துள்ளனர்.

ஆயப்பாக்கம் கிராமத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயம் பெரும்பாலும் பாலாற்றில் இருந்து வரும் உபரிநீரை சார்ந்தே நடைபெற்று வருகிறது. பாலாற்று பகுதியில் இருந்து உபரிநீர் வடிகால்வாய் மூலம் ஆயப்பாக்கம் பெரிய ஏரி, கொக்கனட்டான் ஏரி, வாயலூர் ஏரி மற்றும் சுற்றுப்புற குளங்களுக்கு நீர் சேமிக்கப்பட்டு வந்தது.

இந்த நீராதாரங்களின் மூலம் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால் தற்போது உபரிநீர் வடிகால்வாய் பல இடங்களில் தூர்ந்து சேதமடைந்துள்ளதுடன், சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

குறிப்பாக, சிலர் நீர்ப்பாசன தேவைக்காக வடிகால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதால், நீர் ஓட்டம் பாதிக்கப்பட்டு ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாய நிலங்களுக்கு போதுமான நீர் கிடைக்காமல், சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்லும் வகையில் உபரிநீர் வடிகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுமையாக தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனால் விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version