MSME சிறப்பு வணிக மேம்பாட்டு முகாம்; கடன் விண்ணப்பங்களுக்கு 100% கட்டண தள்ளுபடி

0
3

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான (MSME) சிறப்பு வணிக மேம்பாட்டு முகாம் மறைமலைநகரில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் ஜூன் 30, 2026 வரை நடைபெறும் என செங்கல்பட்டு மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் மாநில நிதி நிறுவனமான TIIC, தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நிதியுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. புதிய தொழில்கள் தொடங்குதல், ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய துறைகளில் முதலீடு செய்தல் போன்ற நோக்கங்களுக்காக பல்வேறு சிறப்பு கடன் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மறைமலைநகர் கிளை அலுவலகத்தில் நடைபெறும் இந்த சிறப்பு முகாமில், தமிழ்நாடு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் (அதிகபட்சம் ரூ.1.5 கோடி வரை), மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத் திட்டங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS), அண்ணல் அம்பேத்கர் வணிக சாம்பியன்கள் திட்டம் (AABCS) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த முகாமின் முக்கிய அம்சமாக, முகாமில் சமர்ப்பிக்கப்படும் தொழில் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணம் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தலைமுறை தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்களது வணிகத் திட்டங்களுடன் கலந்து கொண்டு தொழில் கடன்கள் மற்றும் அரசின் மானியங்களை பெற்று பயன்பெறுமாறு TIIC அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு மறைமலைநகர் TIIC கிளை அலுவலகத்தை 044-27451650 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.