செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த நெய்குப்பி கிராமத்தில் பழுதடைந்த சாலையால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள இச்சாலை உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்துத் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெய்குப்பி கிராமத்தில் அமைந்துள்ள தணிகை அம்மன் கோயில் சாலை, பொதுமக்களின் தினசரி போக்குவரத்திற்கு மிக முக்கியப் பாதையாக அமைந்துள்ளது. சுமார் ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தச் சாலையைப் புதுப்பிப்பதற்காக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. முதற்கட்டமாக, ஜேசிபி இயந்திரம் மூலம் பழைய சாலை சுரண்டி எடுக்கப்பட்டு, புதிய சாலைக்காக ஜல்லிக் கற்களும் கொட்டப்பட்டன.
ஆனால், ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டதோடு சாலைப் பணிகள் பாதியிலேயே திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், அன்றாட விவசாயப் பணிகள் மற்றும் மருத்துவ அத்தியாவசியத் தேவைகளுக்கும் இச்சாலையைப் பயன்படுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்தச் சாலைப் பழுதின் காரணமாக, மக்கள் தங்களது இடங்களுக்குச் செல்ல சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி, நித்தியா, ஜெயா ஆகியோர் கூறுகையில், “சாலைப் பணிகள் முடங்கியது பற்றிச் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எவ்வித முறையான பதிலும் கிடைக்கவில்லை. ஜல்லிக் கற்கள் சிதறிக் கிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வதற்கே அச்சமாக உள்ளது” என்று தங்களது புகார்களைத் தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இந்தச் சாலைப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





