அடையாறு முகத்துவாரத்தில் மணல் திட்டுகள் அகற்றும் பணி தொடக்கம்

0
4

அடையாறு ஆற்றின் முகத்துவார பகுதியில் நீரோட்டத்திற்கு தடையாக இருந்த மணல் திட்டுகள் காரணமாக கொசு உற்பத்தி அதிகரித்ததாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, நீர்வளத்துறை சார்பில் மணல் திட்டுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூரில் தொடங்கி பட்டினம்பாக்கம் வரை சுமார் 42 கிலோமீட்டர் நீளத்தில் பரந்து விரிந்துள்ள அடையாறு ஆறு, கடலில் கலக்கும் முகத்துவார பகுதியில் இயல்பான நீரோட்டம் பாதிக்கப்பட்டிருந்தது. பொதுவாக, கடல் மற்றும் ஆற்று நீர் கலக்கும் பகுதிகளில் நீரோட்டம் சீராக இருந்தால் கொசுப்புழு உற்பத்தி கட்டுப்படுத்தப்படுவதோடு, ஆகாய தாமரை வளர்ச்சியும் குறைக்கப்படுகிறது.

ஆனால், கடந்த மாதம் மணல் திட்டுகள் அகற்றும் பராமரிப்பு பணி நடைபெறாததால், முகத்துவார பகுதியில் சுமார் 400 மீட்டர் அகலத்தில் மணல் மேடுகள் உருவாகி, ஆற்று நீர் கடலில் கலக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்ததுடன், ஆகாய தாமரைகள் வளர்ந்து துர்நாற்றமும் வீசியதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சினையால் கோட்டூர்புரம் முதல் முகத்துவாரம் வரை உள்ள பகுதிகள் மட்டுமின்றி, காந்திநகர் உள்ளிட்ட தெற்கு சென்னை பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து வெளியான செய்தியைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது மணல் திட்டுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தற்போது பராமரிப்பு நிதியின் மூலம் மணல் திட்டுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், அடையாறு ஆற்றின் முழுமையான சீரமைப்பு பணிக்காக விரைவில் தனி நிதி ஒதுக்கப்படும். கடல் நீர் மற்றும் ஆற்று நீர் இயல்பாக கலக்கும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றனர்.