இதை எல்லாம் பார்த்ததே இல்லையே..?! பொதுமக்களை அசர வைத்த தீயணைப்புத்துறையினர்…

0
5

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பொதுமக்களுக்கான தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. “வாங்க கற்றுக் கொள்வோம்… தீ பாதுகாப்பு அறிவோம்… உயிர்களைக் காப்போம்” என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். நிகழ்வில் தீ விபத்துகள் மற்றும் அவசரகால மீட்புப் பணிகளின் போது பயன்படுத்தப்படும் நவீன தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் அந்த கருவிகளின் செயல்முறைகளை நேரடியாக செய்து காட்டி விளக்கமளித்தனர். தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும், பதற்றமின்றி தற்காத்துக் கொள்வது எப்படி, மற்றவர்களை எவ்வாறு மீட்க வேண்டும் என்பன குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தீ பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களை அறிந்துகொண்டனர்.