செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராவுத்தநல்லூர் வி.ஐ.பி. நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்கா பராமரிப்பின்றி பாழடைந்து வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் பேரூராட்சி 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் 5-வது வார்டில் உள்ள ராவுத்தநல்லூர் வி.ஐ.பி. நகர் மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக அம்ரித் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டில் ரூ.32 லட்சம் மதிப்பில் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவில் நடைபாதை, ஊஞ்சல், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீர் பூங்கா வளாகத்தில் தேங்கியதால் அதன் பயன்பாடு பாதிக்கப்பட்டது.
தாழ்வான பகுதியில் திட்டமிடல் இன்றி பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழைக்குப் பிறகு பூங்கா முழுவதும் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பூங்கா வளாகத்தில் செடிகள் மற்றும் புதர்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. மேலும், சிறுவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாதனங்களும் பயன்பாடின்றி சேதமடைந்து வருகின்றன.
அதேபோல், பூங்காவின் நடைபாதையில் பதிக்கப்பட்டிருந்த சிமெண்ட் கற்கள் பல இடங்களில் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் பூங்காவிற்கு வரும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





