சென்னை துரைப்பாக்கம் பகுதியில் காருக்குள் தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
துரைப்பாக்கத்தைச் சேர்ந்த மாதவன் (57) என்பவர் அரும்பாக்கத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த ஜூன் 1ஆம் தேதி தனது ‘டயோடா ஹரைடர்’ காரில் வெளியே சென்ற அவர், அதன்பின் வீடு திரும்பவில்லை. மேலும், அவரது செல்போன் நீண்ட நேரமாக அணைக்கப்பட்டிருந்ததால் குடும்பத்தினர் கவலையடைந்தனர்.
இதையடுத்து, அவரது மனைவி காயத்ரி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். மாதவன் சென்றிருக்கக்கூடிய இடங்கள் மற்றும் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, அவரது கார் ரேடியல் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் காரை சோதனை செய்தபோது, பின்புற இருக்கையில் மாதவன் உயிரிழந்த நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரணம் இயற்கையானதா, உடல்நலக்குறைவால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மருத்துவ அறிக்கை கிடைத்த பிறகே உறுதியான தகவல் வெளியாகும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் துரைப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.





