ஆட்சியும், அதிகாரமும் எப்போதும் உங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்காது என்பதைப் புதிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி.உதயகுமார் கறாராக எச்சரித்துள்ளார். மதுரையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கடுமையான கண்டனங்களை முன்வைத்தார்.
தேர்தல் நேரத்தில் ஊடக மாயாஜாலங்கள் மூலமாகவும், சமூக வலைதள இன்புளுயன்சர்களை நம்பியும் ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுத் தவெக ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், மக்களாட்சியில் ஆட்சியும் அதிகாரமும் எப்போதும் ஒரே ஆளுக்குச் சொந்தமாக இருக்காது. தற்போதைய புதிய அரசு, தாங்கள் தான் நிரந்தர ஆட்சியாளர்கள் என்ற மமதையில் செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதிமுகவை அழிக்க முடியாது: தவெக-வில் முறையான கட்சி கட்டமைப்பு இல்லாததால், தற்பொழுது பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உள்ள சில பலவீனமான நபர்களை வலைவீசிப் பிடித்துத் தங்கள் கட்சியில் இணைத்து வருகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, தலைமைச் செயலகத்தின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் அரங்கேறும் இந்த அரசியல் நகர்வுகள் அப்பட்டமான அயோக்கியத்தனம். இந்தக் குறுக்கு வழி மாயை நீர்க்குமிழி போல விரைவில் வெடிக்கும்.
விவசாயக் கடன் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிப் பெற்ற இந்தக் குறைப்பிரசவ வெற்றி நீண்ட நாள் உயிர் தாங்காது. இணையத்தில் தவெக-வுக்கு எந்த அளவுக்கு கிராஃப் மேலே ஏறியதோ, தற்பொழுது அதே வேகத்தில் அது கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு என ஒரு மாத காலத்திலேயே இந்த அரசு மக்களின் கடுமையான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. எங்களை வீழ்த்த நினைப்பவர்கள் வரலாற்றில் காணாமல் போயிருக்கிறார்கள்; அதிமுக இன்னும் அசுர வேகத்தில் மீண்டு வந்து இவர்களுக்குப் பாடம் புகட்டும்.





