மாமல்லபுரம் ‘சுவதேஷ் தர்ஷன் 2.0’ திட்டம் முடக்கம்.. தொல்லியல் துறை அனுமதி இல்லை?

0
5

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசின் ‘சுவதேஷ் தர்ஷன் 2.0’ திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தொல்லியல் துறை அனுமதி கிடைக்காததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகே தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு சொந்தமான நிலப்பரப்பில், மத்திய அரசின் நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாட்டு திட்டம் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது புல்வெளி, வணிக வளாகம் மற்றும் வாகன நிறுத்துமிடம் போன்ற அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டன.

ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு குறைவால் அந்த பகுதி சீரழிந்த நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக புதிய மேம்பாட்டு திட்டம் தேவைப்பட்டது. இதையடுத்து, ‘சுவதேஷ் தர்ஷன் 2.0’ திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பயணியர் பொழுதுபோக்கு பூங்கா, கருத்தியல் கூடம், வணிக வளாகம், சுத்திகரிப்பு குடிநீர் வசதி மற்றும் சுற்றுலா வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவை பிரதமர் Narendra Modi 2024 மார்ச் 7ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். இருப்பினும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் திட்டப்பணிகள் தொடங்காததால் சுற்றுலா ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறுகையில், திட்டத்தில் முதலில் 12 பணிகள் இடம்பெற்றிருந்தாலும், மாமல்லபுரத்தின் பாரம்பரிய தன்மையை கருத்தில் கொண்டு தற்போது 9 பணிகளை மட்டும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தொல்லியல் துறையின் அறிவுறுத்தலின்படி திட்ட வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இதற்கிடையில், தொல்லியல் துறை மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் இணைந்து சமீபத்தில் திட்டப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். தடையில்லா சான்று கிடைத்தவுடன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.