25 ஆண்டு பழமையான குடிநீர் தொட்டி சேதம்: புதிய பணிகள் தாமதம்

0
5

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தாசரிகுன்னத்தூர் கிராமத்தில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி தற்போது கடுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த தொட்டியின் மூலம் கிராம மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பழைய தொட்டியின் சுவர்கள் மற்றும் இரும்பு அமைப்புகள் சேதமடைந்ததால், குடிநீரில் இரும்புத் துகள்கள் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் குடிநீரின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் நிலவுவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பல ஆண்டுகளாக பராமரிப்பு செய்யப்படாத காரணத்தால், குடிநீர்த் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதியதாக 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி அமைக்க ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே டெண்டர் விடப்பட்டிருந்தாலும், இதுவரை கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

புதிய குடிநீர்த் தொட்டி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், பழைய தொட்டியை அகற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், குடிநீர் விநியோகத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.