செங்கல்பட்டில் மே 25 முதல் ‘தூய்மை திருவிழா

0
9

செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வரும் மே 25ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை 10 நாட்கள் “தூய்மை திருவிழா” நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டம் முழுவதும் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரசு துறைகள், தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த விழாவை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் கட்டமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செங்கல்பட்டு நகராட்சி இணைந்து செங்கல்பட்டில் உள்ள 33 வார்டுகளில் சிறப்பு தூய்மை பணிகளை மேற்கொள்ள உள்ளன. நகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பயனாளிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் இணைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேகரிக்கப்படும் நெகிழி மற்றும் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்தி கலைநயமிக்க சிற்பங்கள் உருவாக்கப்பட உள்ளன. நெகிழி கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை மக்களுக்கு எடுத்துரைப்பதே இதன் நோக்கமாகும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக “வேஸ்ட் டு வெல்த்” என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இதில் சிறந்த படைப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி நடைபெறும் உலக சுற்றுச்சூழல் தின விழாவில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இதனுடன், தினசரி குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் வீடுகளுக்கு “கிரீன் ஹோம்” என்ற பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும், ஒரு தெருவில் பல கிரீன் ஹோம்கள் உருவானால் அந்த தெருவிற்கு “கிளீன் ஸ்ட்ரீட்” என்ற பெயர் வழங்கப்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த தூய்மை திருவிழாவில் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அதிக அளவில் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்காற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.