விஜயை நாங்க மிரட்டல.. காங்கிரஸ் அமைச்சரவையில் பங்கேற்கிறோம் – கிரிஷ் சோடங்கர்

0
2

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், நாளை (மே 22) காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாகப் பங்கெடுக்க உள்ளதாகத் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் வரலாற்றின் புதிய திருப்பங்கள் குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கிரிஷ் சோடங்கர், “இது ஒட்டுமொத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும் மிகவும் உணர்ச்சிமிகுந்த, மகிழ்ச்சியான தருணமாகும். தமிழகத்தில் அமையவுள்ள புதிய தவெக அமைச்சரவையில் நாளை காங்கிரஸ் கட்சி முறைப்படி இடம் பெறுகிறது. எந்தெந்தத் துறைகளைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் முதலமைச்சர் விஜய்க்கு எவ்வித நிர்பந்தமும் கொடுக்கவில்லை; இலாகாக்கள் குறித்த இறுதி முடிவை முற்றிலும் அவரது தனிப்பட்ட விருப்பத்திற்கே விட்டுவிட்டோம்” என்று பெருந்தன்மையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “தெற்கில் ஏற்கனவே கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கம்பீரமாக ஆட்சி செய்து வரும் சூழலில், தற்போது தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் கால் பதிப்பது, கட்சியின் அசுர வளர்ச்சிக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த தொடக்கமாகும். எங்களது அகில இந்தியத் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கேரளா மற்றும் தமிழக அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். குறிப்பாக, ராகுல் காந்திக்குத் தமிழக மக்கள் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் எப்போதும் உண்டு. இதனைத் தென்னிந்தியாவில் ஒரு வலுவான ‘கூட்டணி ஆட்சிக்கான’ புதிய தொடக்கமாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே, எங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தயவுசெய்து அமைச்சரவைக்குள் வாருங்கள்; இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டணி ஆட்சியின் புதிய சகாப்தத்தில் நீங்களும் இணையுங்கள்” என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார்.

“நாளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள் வரவுள்ள நிலையில், அதே நாளில் காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து” கேள்விக்கு மிகவும் உருக்கமாகப் பதிலளித்த கிரிஷ் சோடங்கர், “தேசத்திற்காகத் தன்னுயிரைத் தியாகம் செய்த தலைவர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளும், தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்கும் நாளும் ஒரே தேதியில் அமைந்தது முற்றிலும் எதார்த்தமான ஒன்று. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆட்சிப் பொறுப்பை மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியின் தியாகத்திற்கே நாங்கள் தார்மீகமாகச் சமர்ப்பிக்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இறுதியாக, “மாற்றுக்கட்சியான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் விசிக அமைச்சரவையில் இணைவது” குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “தமிழகத்தை எப்போதும் மதச்சார்பற்ற கட்சிகள்தான் ஆள வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருந்து தவெக-வை அரியணையில் அமர வைத்துள்ளனர். விசிக அமைச்சரவையில் இணைவது என்பது முற்றிலும் திருமாவளவனின் தனிப்பட்ட முடிவு, அதில் நாம் எவ்வித அழுத்தமும் தரக் கூடாது. தேர்தல் களத்திற்கு முன்பே தவெக தனது அதிகாரப் பகிர்வு மற்றும் கூட்டணி அரசாங்கக் கொள்கையைப் பிரகடனப்படுத்திவிட்டது, மக்களும் அதற்கு முழுமையாக வாக்களித்துள்ளனர். எனவே, நாம் அனைவரும் இந்தத் தவெக கூட்டணியில் இணைந்து ஒரு முழுமையான, நேர்மையான நல்லாட்சியைத் தமிழக மக்களுக்கு வழங்குவோம்” என்று கிரிஷ் சோடங்கர் தனது பேட்டியை நிறைவு செய்தார்.