மதுரையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: வைர மாங்கல்யம் சூடினார் அன்னை மீனாட்சி!

0
1

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை அதிவிமர்சையாக நடைபெற்றது. மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டிருக்க, மங்கல நாதஸ்வர இசை முழங்க, பக்தர்கள் வெள்ளத்தில் அன்னை மீனாட்சியின் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்கத் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு திருக்கல்யாண வைபவத்திற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகமே ஒரு நந்தவனம் போலக் காட்சியளித்தது. பெங்களூரு, கர்நாடகா மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் வண்ண மலர்கள் மற்றும் 500 கிலோ பழங்களைக் கொண்டு கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, மணமக்கள் வீற்றிருந்த திருக்கல்யாண மேடை மட்டும் சுமார் 2 டன் வாசனை மிகுந்த மலர்களால் கண்கவர் முறையில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு, இன்று அதிகாலையிலேயே மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் மணக்கோலத்தில் மணமேடைக்கு எழுந்தருளினர். வேத மந்திரங்கள் விண்ணை முட்ட, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக, திருப்பரங்குன்றத்திலிருந்து முருகப் பெருமானுடன் பவளக்கனிவாய் பெருமாள் மணமேடைக்கு வருகை தந்தார். அவர் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி முழங்க, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த மங்கல நாண் அணிவிக்கப்பட்டது. இந்தக் கண்கொள்ளாக் காட்சியைத் தரிசித்த ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள், தங்களது பழைய மாங்கல்யக் கயிற்றை மாற்றிப் புதிய கயிற்றை அணிந்து கொண்டனர். நாளை சித்திரைத் திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறவுள்ளது.