
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அருகே அரிசி ஆலையில் இருளர் பழங்குடியின மக்களைக் கொத்தடிமைகளாக வைத்துத் துன்புறுத்திய வழக்கில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை செங்கல்பட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வறிக்கைகள் அடிப்படையில் இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் வடகடம்பாடி கிராமத்தில் வீராசாமி என்பவர் நடத்தி வந்த அரிசி ஆலையில், கடம்பாடி மற்றும் திண்டிவனம் பகுதிகளைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 9 இருளர் பழங்குடியினர் வேலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு வெறும் 5,000 ரூபாய் முன்பணம் கொடுக்கப்பட்டு, கடந்த 2009-ஆம் ஆண்டு வரை சுமார் நான்கு ஆண்டுகள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டுள்ளனர்.
காலை 6 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை ஓய்வின்றி உழைப்பு. ஒரு நாளைக்கு 50 ரூபாய் கூலி நிர்ணயிக்கப்பட்டு, அதில் 25 ரூபாய் முன்பணத்திற்காகப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. கையில் கிடைத்தது வெறும் 10 முதல் 25 ரூபாய் மட்டுமே.
உடல்நிலை சரியில்லாத போது கூட மருத்துவமனைக்குச் செல்ல அனுமதி இல்லை. குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தடை. தப்பி ஓட முயன்றவர்களைத் தேடிப் பிடித்து வந்து கடுமையாகத் தாக்கியதோடு, ஓலைக்கொட்டகையில் அடைத்து வைத்து உடல்ரீதியான துன்புறுத்தல்களும் அரங்கேறியுள்ளன.
கடந்த 2009, பிப்ரவரி 6-ஆம் தேதி தனியார் அமைப்பு கொடுத்த தகவலின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் (RTO) மற்றும் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் ஆலைக்குள் அதிரடி ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு நிலவிய கொடூரமான சூழலைக் கண்ட அதிகாரிகள், ஒன்பது பேரையும் உடனடியாக மீட்டனர். வருவாய் கோட்டாட்சியர் வழங்கிய ‘விடுதலைச் சான்று’ (Release Certificate) இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் மிக முக்கிய ஆதாரமாக அமைந்தது.
செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள், வழக்கின் முதல் குற்றவாளியான வீராசாமி விசாரணை காலத்திலேயே இறந்துவிட்டதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டன. ஆலை உரிமையாளரின் கார் ஓட்டுநர் ஏகாம்பரம் என்பவர், தொழிலாளர்களைத் தாக்கியது மற்றும் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது போன்ற குற்றங்களுக்காக 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டார்.
நாங்கள் அங்கிருந்து உயிருடன் வந்ததே பெரிய விஷயம்” எனப் பாதிக்கப்பட்ட சுமதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் கடம்பாடி கிராமத்தில் விவசாயக் கூலி வேலை செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.




