“நோபல் பரிசுக்குத் தகுதியான ஒரே அமைப்பு அமெரிக்க ராணுவம்தான்!” – பாதுகாப்பு அமைச்சர் அதிரடி!

0
3

உலகளவில் அமைதிக்காக வழங்கப்படும் உயரிய விருதான நோபல் பரிசுக்கு, அமெரிக்க ராணுவமே மிகவும் தகுதியானது என்று அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் ஹெக்செத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு நோபல் பரிசு கிடைக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் சுமார் 8 போர்களைத் தான் நிறுத்தியுள்ளதாகவும், அதனால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கடந்த ஆண்டு முழுவதும் கூறி வந்தார். ஆனால், 2025-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது டிரம்பிற்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், டிரம்பின் கருத்தை வழிமொழியும் வகையில் பேசியுள்ள பீட்டர் ஹெக்செத், “ஒவ்வொரு ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டிய ஒரே நிறுவனம் அமெரிக்க ராணுவம்தான். ஏனெனில், அமெரிக்க ராணுவத்தின் பலத்தால்தான் உலகில் பல இடங்களில் அமைதி நிலைநாட்டப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளையும் அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானிய கப்பல்களை முற்றுகையிடும் பணியில் ஏற்கனவே அமெரிக்கக் கடற்படை ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது அந்தப் பணிக்கு வலுசேர்க்கும் வகையில் மேலும் ஒரு பிரம்மாண்டமான ‘விமானம் தாங்கிப் போர் கப்பல்’ (Aircraft Carrier) அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஹெக்செத் உறுதிப்படுத்தியுள்ளார். அமைதியைப் பற்றிப் பேசினாலும், ஈரானின் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்க ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதில் அமெரிக்கா பின்வாங்காது என்பதையே அமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காட்டுகின்றன.