தவெக வேட்பாளர் மீது தாக்குதல் முயற்சி? திமுகவினர் பதிலடி – துறைமுகம் தொகுதியில் போலீஸ் குவிப்பு!

0
4

தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பில் இருந்தபோது, இரு தரப்பு வேட்பாளர்களும் நேருக்கு நேர் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தொண்டர்கள் கைகலப்பில் இறங்கியது அப்பகுதியையே போர்க்களமாக மாற்றியது.

துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளர் பி.கே. சேகர்பாபு மற்றும் தவெக வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோர் ஒரே வாக்குச்சாவடியில் ஆய்வுக்கு வந்தபோது இந்தச் சிக்கல் தொடங்கியது. அப்போது பேசிய சினோரா அசோக், “சேகர்பாபு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்த வாக்குச்சாவடியைக் கைப்பற்ற (Booth Capturing) முயற்சி செய்கிறார். வாக்காளர்களை அச்சுறுத்தி, ஜனநாயகத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறார். இதனைத் தட்டிக்கேட்ட எங்களை திமுகவினர் தாக்க முயல்கின்றனர்” எனக் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

தவெக வேட்பாளரின் இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த திமுகவினர், சேகர்பாபு வழக்கமான ஆய்வுக்குத்தான் வந்தார் என்றும், தோல்வி பயத்தில் தவெகவினர் வீண் பழி சுமத்துகின்றனர் என்றும் பதிலடி கொடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆதரவாளர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலைத் தொடர்ந்து துறைமுகம் தொகுதியில் கூடுதல் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே கூட்டம் கலைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்துத் தேர்தல் ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.