தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 234 தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தேர்தலில், 5,73,43,291 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 14,59,093 பேர் முதல் முறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று வரை தபால் வாக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பணிக்காக 1,06,408 இவிஎம் இயந்திரங்கள், 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 75,064 விவிபேட் இயந்திரங்கள் தயாராக உள்ளன. மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 3 லட்சம் அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 83,000 காவல்துறையினர் மற்றும் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கைக்காக 63 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 பெண்கள் மட்டும் பணியாற்றும் மையங்கள், 71 மாற்றுத்திறனாளிகள் பணிபுரியும் மையங்கள் மற்றும் 79 இளைஞர்கள் பணியாற்றும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பசுமை வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் தகவல்களை அறிய தேர்தல் வழிகாட்டி (https://votervazhikatti.tn.gov.in/) இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.





