தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சூழலில், இது குறித்து விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முதல்முறையாகத் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார். எப்போதோ முடிந்துபோன ஒரு விஷயத்தை, விஜய் அரசியலில் தடம் பதிக்கும் இந்த நேரத்தில் வேண்டுமென்றே சிலர் கிளறுவதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“விஜய் பெண்களுக்கு எதிரானவர், குடும்பத்திற்கு எதிரானவர், பெற்றோருக்கு எதிரானவர் என அவரது நற்பெயரைச் சிதைக்கும் வேலையைச் சிலர் செய்கின்றனர். மற்றவர்களின் குணாதிசயங்களைச் சிதைப்பதில் அவர்கள் பி.எச்.டி (PhD) முடித்தவர்கள். இது திட்டமிட்டுச் செய்யப்படும் ஒரு ‘பெர்சனல் அட்டாக்’,” என்று எஸ்.ஏ.சி காட்டமாகத் தெரிவித்தார்.
விவாகரத்து குறித்துப் பேசிய அவர், “எப்போதோ இருவருக்குள்ளும் சமரசமாகி, எப்போதோ இருவரும் கையெழுத்திட்டு முடிந்த ஒரு விஷயத்தை இப்போது வெளியே கொண்டு வருகிறார்கள். இந்தச் சரியான நேரத்தில் (தேர்தல் நேரம்) இது வெளியே வருகிறது என்றால், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் அரசியல் எதிரிகளாகத் தான் இருக்க முடியும்,” என விளக்கமளித்தார். இதன் மூலம் விஜய் – சங்கீதா இடையே நீண்ட காலத்திற்கு முன்பே பிரிவினைக்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் நடந்துள்ளதை அவர் மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 பக்க மனுவில் ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரை இல்லத்தில் வசிக்கும் உரிமை கோரப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற விசாரணையின் போது விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஆஜராகவில்லை. இருவரும் பொதுவெளியில் பிரபலமானவர்கள் என்பதால் பாதுகாப்பு கருதி ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் ஆஜராக அனுமதி கோரியுள்ளனர். இருப்பினும், வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு வழக்கைத் தள்ளிவைத்த நீதிபதி, அன்று இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், விஜய்யின் குடும்ப விவகாரம் குறித்து அவரது தந்தையே பேசியிருப்பது அரசியல் மற்றும் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





