கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஒருவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. கோடைக்கால வெப்பத்திலிருந்து தப்பிக்கக் குளிர்ச்சியான இடங்களைத் தேடி வரும் பாம்புகள், மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் ஊடுருவுவது இப்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடாலி பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் அல்ஜோ, நேற்று இரவு தனது சகோதரர் அனோத்துடன் அறையில் உறங்கிக் கொண்டிருந்தான். நள்ளிரவில் சிறுவன் அனோத்தின் தலையணைக்கு அடியில் புகுந்திருந்த நச்சுப் பாம்பு ஒன்று, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அல்ஜோவை எதிர்பாராத விதமாகக் கடித்தது. அதிகாலையில் சிறுவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியுற்றபோது, அவனது பெற்றோர் அது ‘புட் பாய்சனிங்’ எனப்படும் உணவு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம் என்றே கருதியுள்ளனர்.
சிறுவனின் நிலைமை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடலில் பாம்பு கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்தான்.
அல்ஜோவுடன் அதே படுக்கையில் உறங்கிய அவனது சகோதரர் அனோத்துக்கும் பாம்பு கடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவர் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த அறைக்குள் குடும்பத்தினர் சென்று பார்த்தபோது, தலையணைக்கு அடியில் பதுங்கியிருந்த பாம்பைக் கண்டு அலறித் துடித்தனர். ஆத்திரமடைந்த அவர்கள் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள உள்ளூர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால், வெப்பம் தாளாமல் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களைத் தேடி வீடுகளுக்குள், குறிப்பாகப் படுக்கைகள் மற்றும் ஈரப்பதம் உள்ள இடங்களுக்குள் நுழையக்கூடும் என வனத்துறையினர் எச்சரிக்கின்றனர்.
தூங்குவதற்கு முன் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகளைச் நன்றாகத் தட்டிச் சோதிக்க வேண்டும்.
சுற்றுப்புறத் தூய்மை: வீட்டைச் சுற்றியுள்ள புதர்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். பாம்பு கடித்தால் தாமதிக்காமல், உடனடியாகப் பாம்புக் கடிக்கான விஷமுறிவு மருந்து (Anti-snake venom) உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.





