திமுக வேட்பாளர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு.. தாரைத் தப்பட்டை முழங்க வரவேற்பு!

0
6

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், செங்கல்பட்டு தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.

செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி, இன்று கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவர் அப்பகுதிக்கு வருகை தந்தபோது, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின் போது வேட்பாளருக்குத் தாரைத் தப்பட்டை முழங்க, வீரத் தமிழர்களின் அடையாளமான சிலம்பம் சுற்றியும், பெண்கள் மலர் தூவியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருக்குப் பொன்னாடை அணிவித்து, வீர வாள் பரிசாக வழங்கப்பட்டது தொண்டர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து வர, வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி வீதி வீதியாக நடந்து சென்று மக்களை நேரில் சந்தித்தார்.

கடைகளுக்கும் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று முதியவர்களிடம் ஆசி பெற்றும், இளைஞர்களிடம் கைகுலுக்கியும் தனது சின்னத்திற்கு அவர் தீவிர ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது பேசிய நிர்வாகிகள், “மக்களின் இந்த அமோக ஆதரவைப் பார்க்கும்போது செங்கல்பட்டு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி இப்போதே உறுதியாகிவிட்டது” எனத் தெம்பாகத் தெரிவித்தனர். பிரச்சாரப் பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் பறக்க, செங்கல்பட்டு தேர்தல் களம் ஒரு திருவிழாக் கோலத்தைப் பூண்டுள்ளது.