தமிழ் சினிமாவின் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவை, அவரது ஆரம்பகால நாயகியும் மூத்த நடிகையுமான ராதிகா சரத்குமார் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பாரதிராஜாவை, ராதிகா சந்தித்த நிகழ்வு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் கடந்த ஆண்டு காலமானார். தனது வாரிசின் திடீர் மறைவு பாரதிராஜாவை மனதளவிலும் உடலளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதனால் உடல்நலம் நலிவடைந்த அவர், சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் வீடு திரும்பிய அவர், தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி ஓய்வு எடுத்து வருகிறார்.
தனது குருநாதரைச் சந்திப்பதற்காக அவர் இல்லத்திற்குச் சென்ற நடிகை ராதிகா, வெகுநேரம் அவருடன் உரையாடி உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தனது வீட்டில் இருந்தபடியே இந்தப் படத்தைப் பார்த்த பாரதிராஜா, ராதிகாவின் அபாரமான நடிப்பை வெகுவாகப் பாராட்டினார். தன்னைச் சந்திக்க வந்த ராதிகாவிடம், “இந்தப் படத்தில் உன்னுடைய நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது; உனக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும்” என்று மனம் திறந்து பாராட்டினார்.
பாரதிராஜாவும் ராதிகாவும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட இந்த உணர்ச்சிகரமான வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் ராதிகாவைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜா, பல தசாப்தங்களைக் கடந்தும் தனது சிஷ்யையின் வளர்ச்சியைப் பாராட்டி வருவது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





