தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தாம்பரம் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 2 லட்சத்து 60 ஆயிரத்து 717 ரூபாயைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் தினேஷ் தலைமையிலான குழுவினர் போலீசார் உதவியுடன் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மூடிய வேனை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் பெரும் தொகையிலான பணம் இருப்பது கண்டறியப்பட்டது.
பிடிபட்ட பணத்தைத் தாம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கோட்டாட்சியரான என். முரளி, வட்டாட்சியர் நடராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தினர். பணத்தைக் கொண்டு வந்த ராஜேஷ் மற்றும் கபிலன் ஆகிய இருவரிடமும் நடத்திய விசாரணையில், அந்தப் பணத்திற்கு உரிய ஆவணங்கள் ஏதும் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்தது.
விசாரணையின் போது, அந்தப் பணம் பல்வேறு டாஸ்மாக் கடைகளில் வசூலான தொகை என்றும், அதனை அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் பணம் வசூல் செய்யும் நிறுவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் பிடிபட்டவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, போலீஸ் பாதுகாப்பு இல்லாமலும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் இவ்வளவு பெரிய தொகையைக் கொண்டு சென்றதால் அதிகாரிகள் அந்த விளக்கத்தை ஏற்கவில்லை.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட முழுத் தொகையையும், பிடிபட்ட இருவரையும் மேலதிக விசாரணைக்காக வருமான வரித்துறை (Income Tax) அதிகாரிகளிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தாம்பரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ரொக்கம் பிடிபட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





