கல்குவாரி நீர்நிலையால் உயிர் ஆபத்து: பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

0
4

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அருகிலுள்ள சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி பள்ளம், தற்போது பாதுகாப்பு குறைவால் ஆபத்தான நீர்நிலையாக மாறியுள்ளது. இதனை சுற்றி தடுப்பு வேலி அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த பழைய கல் குவாரி பள்ளம் சுமார் 500 அடி ஆழம் கொண்டதாக கூறப்படுகிறது. மழைநீர் நிரம்பியதால் இது பெரிய நீர்நிலையாக மாறியுள்ளது. இதனால் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், ஒரகடம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து இளைஞர்கள் வார இறுதிகளில் இங்கு வந்து குளித்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.

இங்கு வரும் சிலர் காடு அருகே அடுப்பு மூட்டி உணவு தயாரித்து, பின்னர் மது அருந்தி நீரில் இறங்குவது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், இந்த இடத்தின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு இல்லாத சில பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்து துணி துவைத்தல், நீச்சல் பழகுதல் போன்றவற்றிலும் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த ஆண்டும் மது போதையில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த பகுதியில் குடியிருப்புகள் இல்லாததால் அவசர காலங்களில் உடனடி உதவி கிடைப்பதும் சிரமமாக உள்ளது. எச்சரிக்கை செய்தாலும் பலர் அதை பொருட்படுத்தாமல் நீரில் இறங்குவதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த கல்குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலி அமைத்து, எச்சரிக்கை பலகைகள் நிறுவி, பொதுமக்கள் அணுக முடியாத வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.