நாகர்கோவிலில் பிரதமர் மோடி – இபிஎஸ் பிரம்மாண்ட ரோடு ஷோ! அலைமோதிய மக்கள் கூட்டம்!

0
5

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட அரசியல் களம் இன்று வரலாறு காணாத எழுச்சியைக் கண்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நடத்திய பிரம்மாண்ட வாகன பேரணி (Road Show) நாகர்கோவிலையே ஸ்தம்பிக்க வைத்தது.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தடைந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக வேப்பமூடு சந்திப்பிற்குப் பிரதமர் வந்தபோது, வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் “மோடி.. மோடி..” என முழக்கமிட்டு மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி வரை சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு நடைபெற்ற இந்தப் பேரணியில், திறந்தவெளி வாகனத்தில் பிரதமர் மோடியுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இந்த வாகனப் பேரணியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர். பேரணியின் ஒரு பகுதியாக, வடசேரி பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்குப் பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சாலைகளின் இருபுறமும் தொண்டர்கள் கட்சி வெற்றிக் கொடிகளுடன் திரண்டிருந்ததால் போக்குவரத்து முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. வடசேரி பகுதியில் பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, மீண்டும் ஹெலிகாப்டர் தளம் நோக்கிப் புறப்பட்டார்.

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் இணைந்த பிறகு, பிரதமர் மோடியும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து நடத்திய இந்த முதல் ரோடு ஷோ, தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.