Home Politics பேருந்து வசதி இன்றி ஏமாற்றம்! தமிழக தேர்தலில் வாக்களிக்க முடியாமல் தவித்த பயணிகள்!

பேருந்து வசதி இன்றி ஏமாற்றம்! தமிழக தேர்தலில் வாக்களிக்க முடியாமல் தவித்த பயணிகள்!

0

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் இந்த முறை 84.69% வாக்குகள் பதிவாகிப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்து வசதி குறைபாடுகளால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களின் வாக்கைச் செலுத்த முடியாமல் ஏமாற்றமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகச் சென்னை மற்றும் கோவையில் பணியாற்றும் தென் மாவட்ட மற்றும் டெல்டா மாவட்ட மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வாக்குப்பதிவு நாளான இன்று காலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கத் திட்டமிட்டிருந்த இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் நேற்று இரவு முதல் பேருந்து நிலையங்களில் குவியத் தொடங்கினர். சென்னை கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். தேர்தலுக்காகச் சென்னையிலிருந்து கூடுதலாக 1,400 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், பேருந்து நிலையங்களில் நிலைமை தலைகீழாக இருந்தது.

பேருந்து நிலையங்களில் போதிய பேருந்துகள் இல்லாததால், மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அதிகாலையில் புறப்பட்ட பேருந்துகளும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாகச் சென்னையிலிருந்து விழுப்புரத்தை அடையவே பல மணி நேரமானது. சொந்த வாகனங்களில் புறப்பட்ட பலர், நெரிசலால் தொடர்ந்து பயணிக்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பும் அவல நிலையும் ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்ததால், வாக்குப்பதிவு நேரத்தை இரவு 8 மணி வரை நீடிக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க மறுத்துவிட்டதால், திட்டமிட்டபடி மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. “ஊருக்குச் சென்றாவது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று ஆர்வத்துடன் வந்தோம், ஆனால் போக்குவரத்து நிர்வாகக் குளறுபடிகளால் எங்களுடைய அடிப்படை உரிமையைப் பறி கொடுத்துவிட்டோம்” எனப் பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஏற்பட்ட தொய்வே இந்த நிலைமைக்குக் காரணம் எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version