Home Politics “99 வயதிலும் ஜனநாயகக் கடமை!” – முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவின் செயலுக்குப் பிரதமர் மோடி...

“99 வயதிலும் ஜனநாயகக் கடமை!” – முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவின் செயலுக்குப் பிரதமர் மோடி பாராட்டு!

0

தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், 99 வயதான முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி. ஹண்டே சென்னையில் நேரில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார். ஒரு மருத்துவ மாணவராகத் தனது முதல் வாக்கைப் பதிவுச் செய்தவர், ஒரு நூற்றாண்டுக் காலத்தை நெருங்கும் நிலையிலும் இன்றும் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றியிருப்பது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

தனது வாக்கைச் செலுத்திய பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், “99 வயதான நிலையிலும், நம் தேசம் தனக்கான குரலை வெளிப்படுத்துவதை நான் இன்று கண்டேன். ஒரு மருத்துவ மாணவனாக, 1946-ஆம் ஆண்டில் நான் முதன்முறையாக ஓட்டு போட்டேன். இது வெறும் உரிமை மட்டுமல்ல; நாம் விட்டுச்செல்லும் எதிர்காலத்தின் மீதான ஒரு பொறுப்பு. உங்கள் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது. வெளியே வாருங்கள், துணிந்து உங்கள் ஓட்டைப் பதிவு செய்யுங்கள்” என இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

டாக்டர் ஹண்டேவின் இந்தச் செயலைப் பாராட்டும் வகையில், அவரது அறிக்கையை மேற்கோள் காட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “இது ஒரு மிக முக்கியமான செய்தி. டாக்டர் ஹண்டேவின் இந்த அர்ப்பணிப்பு அனைவரையும் ஊக்கப்படுத்தும். இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வாக்களித்து நமது ஜனநாயகத்தை வலுப்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” எனப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த பிரபல டாக்டரான ஹெச்.வி. ஹண்டே, எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் இருமுறை சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர். தமிழகத்தில் போலியோ மற்றும் தட்டம்மை ஒழிப்பில் பெரும் பங்காற்றியவர். பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்கப் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.

தமிழகம் முழுவதும் 4,500-க்கும் மேற்பட்ட ஆரம்பச் சுகாதார நிலையங்களைக் கட்டமைத்த பெருமை இவருக்கு உண்டு. இவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு உயரிய ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கிக் கௌரவித்தது.

தேர்தல் களத்தில் 84.69% வாக்குப்பதிவு பதிவாகியுள்ள நிலையில், டாக்டர் ஹண்டே போன்ற முதியவர்களின் இந்த உந்துதல் இளைஞர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version