தவெக வேட்பாளர்களுக்கு ரிசார்ட் ரெடி.. குதிரை பேரத்தைத் தடுக்க விஜய் போட்ட மாஸ்டர் பிளான்!

0
3

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன.

வாக்குப்பதிவிற்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான வெற்றியை உறுதி செய்யாமல், மக்களையும் கட்சியினரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. பெரும்பாலான கணிப்புகள் திமுக கூட்டணி வெல்லும் எனக் கூறினாலும், தனி மெஜாரிட்டி கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது.

மூன்று முக்கியக் கணிப்புகள் அதிமுக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளன. இரண்டு கணிப்புகள் விஜய்க்குச் சாதகமாக வந்துள்ளன. குறிப்பாக, 41 சதவீத வாக்குகளுடன் 121 இடங்களைக் கைப்பற்றி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்று அந்தக் கணிப்புகள் கூறுகின்றன.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ‘தொங்கு சட்டசபை’ அமைய வாய்ப்புள்ளதாகக் கருதும் விஜய், இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார். திராவிடக் கட்சிகளின் குதிரை பேரத்தில் (Horse-trading) தங்கள் வேட்பாளர்கள் சிக்கிவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவரும் தேர்தல் சான்றிதழைப் பெற்றவுடன் நேரடியாகப் பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று விஜய் நிபந்தனை விதித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டைத் தவெக மேலிடம் புக் செய்துள்ளது. வெற்றி பெறும் வேட்பாளர்கள் அனைவரும் அங்கேயே தங்க வைக்கப்பட உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாகத் தனது கட்சியினருடன் தொடர் கூட்டங்களை நடத்தி வரும் விஜய், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

தமிழகத்தின் உண்மையான அரசியல் நிலவரம் நாளை வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தெரிந்துவிடும். ஒருவேளை விஜய் எதிர்பார்த்தது போலத் தொங்கு சட்டசபை அமைந்தால், தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பு அடங்க மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.