தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், சரியாக இன்று காலை 10 மணி அளவில் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றார். தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், விஜய்க்குப் பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். “ஜோசப் விஜய் எனும் நான்…” என்று அவர் உறுதிமொழி எடுக்கத் தொடங்கியபோது, அரங்கமே அதிரும் வகையில் தொண்டர்கள் எழுப்பிய முழக்கம் விண்ணைத் தொட்டது. சுமார் 59 ஆண்டுகளாகத் தமிழகத்தில் நிலவி வந்த இருவேறு திராவிடக் கட்சிகளின் ஆட்சி அதிகாரத்திற்குப் பிறகு, ஒரு புதிய அரசியல் சக்தியாகத் தவெக இன்று அரியணை ஏறியுள்ளது. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கோட் சூட் அணிந்து வந்து முதலமைச்சராக பதவியேற்றது விஜய்தான் என்ற சரித்திரத்தையும் உருவாக்கியுள்ளார்.
பதவியேற்பு விழாவில், விஜய்யுடன் சேர்த்து தவெக-வைச் சேர்ந்த 9 முக்கிய நிர்வாகிகளும் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதில் மூத்த அரசியல் தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், ‘புஸ்ஸி’ என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் அடங்குவர். காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் இந்தப் புதிய அமைச்சரவை மலர்ந்துள்ளது. குறிப்பாக, முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், ஊடகப் பிரபலம் ஏ. ராஜ்மோகன், காரைக்குடி பிரபு, சிவகாசி கீர்த்தனா மற்றும் பி. வெங்கடரமணன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
இந்த விழாவின் மிக முக்கியச் சிறப்பம்சமாக, அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விஜய்க்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டது, தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்குத் தேசிய அளவில் கிடைத்துள்ள அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. பதவியேற்பு விழா முடிந்த கையோடு, கோட்டைக்குச் செல்லும் முதலமைச்சர் விஜய், ஏழை எளிய மக்களுக்கான தனது முதல் கையெழுத்தை இடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் இந்த வெற்றியை ஒரு மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
