செங்கல்பட்டு மாவட்டம் வேளாம்பூத்தூர் ஊராட்சியில், ‘தூய்மையான செங்கல்பட்டு’ திட்டத்தின் கீழ் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி நிர்வாகம், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மக்கும் குப்பை, மக்காத குப்பை, அபாயகரமான குப்பை மற்றும் மருத்துவக் கழிவுகள் என நான்கு வகைகளாக குப்பைகளை பிரித்து, தனித்தனி வண்ண வாளிகளில் சேகரித்து ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குப்பைகளை முறையாக பிரித்து வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கவும், மறுசுழற்சி நடவடிக்கைகளை எளிதாக்கவும் முடியும் என விளக்கப்பட்டது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் அபாயகரமான பொருட்களை தனியாக சேகரிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், தூய்மையான சுற்றுப்புறச் சூழலை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த புரிதல் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது.
