தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் போர்க்களமாக மாறியுள்ளது. 108 இடங்களைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் எண்ணான 118-ஐ நெருங்க இடதுசாரிகள் மற்றும் விசிக-வின் தயவை நாடியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், புதிய ஆட்சி அமைப்பதில் பெரும் இழுபறி நீடிக்கிறது. 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தவெக தலைவர் விஜய், ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தாலும், ஆளுநர் கோரும் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பிக்க முடியாமல் திணறி வருகிறார். இந்நிலையில், விசிக-வின் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடதுசாரிகள் மற்றும் விசிக-விற்கு விஜய் கடிதம்காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தவெக-விற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் பலம் 113-ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 5 உறுப்பினர்கள் (6 உறுப்பினர்கள் இருந்தால் கூடுதல் பலம்) தேவைப்படுவதால், தவெக தலைவர் விஜய் ஒரு முக்கியமான நகர்வை மேற்கொண்டுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM) ஆகிய மூன்று கட்சிகளுக்கும் ஆதரவு கோரி விஜய் அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியுள்ளார்.திருமாவளவன் கருத்து: இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “விஜய் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆதரவு அளிப்பது குறித்து கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுடன் பேசி இறுதி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
பின்னணியில் என்ன நடக்கிறது?விசிக இன்று (மே 7) நடத்தவிருந்த உயர்நிலைக்குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் அரங்கில் பல யூகங்களை எழுப்பியுள்ளது. இடதுசாரி கட்சிகள் மே 8-ஆம் தேதி தங்களது ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதால், அன்றைய தினமே விசிக-வும் தனது கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக மற்றும் இடதுசாரிகள், தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்து ஒருமித்த முடிவை எடுக்க விரும்புவதே இந்த ஒத்திவைப்பிற்கு முக்கியக் காரணம் எனக் கருதப்படுகிறது.
நாளை மறுநாள் (மே 8) நடைபெறும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவே, விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்பாரா அல்லது ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல் நீடிக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.
தமிழகத்தில் ‘கூட்டாட்சி’ அல்லது ‘ஆதரவுடன் கூடிய ஆட்சி’ அமையுமா என்பது விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் கைகளிலேயே உள்ளது. திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
