வண்டலூரில் தப்பிய சிறுத்தை பூனை: தேடுவது நிறுத்தம்

0
6

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியியல் பூங்காவில் பூங்காவில் கூண்டை உடைத்து தப்பிய அரிய வகை பெண் சிறுத்தை பூனையை தேடும் பணியை நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

21 ஆண்டுகளுக்கு பிறகு வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த அரிய வகை விலங்கு, சமீபத்தில் கூண்டை உடைத்து தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பூங்கா நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் பல நாட்கள் தேடியும் விலங்கை கண்டுபிடிக்க முடியாத நிலையில், தற்போது தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரிய வகை விலங்கை பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்படவில்லை என்றும், தேடுதல் பணியை கைவிடக்கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு செய்து, தப்பிய விலங்கை மீண்டும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பூங்கா பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.