Home செங்கல்பட்டு வண்டலூர் பூங்காவில் தப்பிய சிறுத்தை பூனை – தீவிர தேடுதல் வேட்டை!

வண்டலூர் பூங்காவில் தப்பிய சிறுத்தை பூனை – தீவிர தேடுதல் வேட்டை!

0

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரிய வகை சிறுத்தை பூனை ஒன்று கூண்டில் இருந்து தப்பியுள்ள சம்பவம் பூங்கா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகப் பூங்கா ஊழியர்கள் அடர்ந்த வனப்பகுதியில் அந்தப் பூனையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் பூங்கா நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. விலங்குகள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், ஜம்பு உயிரியல் பூங்காவிலிருந்து கடந்த மார்ச் மாதம் ஒரு ஜோடி சிறுத்தை பூனைகள் வண்டலூருக்குக் கொண்டுவரப்பட்டன.

சுமார் 21 வருடங்களுக்குப் பிறகு வண்டலூர் பூங்காவிற்கு இந்தச் சிறுத்தை பூனைகள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. கொண்டுவரப்பட்ட பூனைகள் தனியான கூண்டில் வைக்கப்பட்டு, பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தன.

நேற்று முன்தினம் பூங்கா ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை முடித்த பிறகு, கூண்டினைச் சரியாக மூடாததே இந்தத் தப்பியோட்டத்திற்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது. ஊழியர்களின் கவனக்குறைவால் கூண்டில் இருந்து வெளியேறிய அந்தச் சிறுத்தை பூனை, பூங்கா வளாகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்துள்ளது.

தப்பியோடிய பூனையைப் பிடிப்பதற்காகப் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் வண்டலூர் பூங்காவில், இந்தத் தேடுதல் வேட்டை தற்போது தீவிரமடைந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version