வண்டலூர்: வேன் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து

0
1

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் பூந்தமல்லி அருகே பழுதாக நின்று கொண்டிருந்த வேன் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் தாடாவில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலையில் இருந்து குளிர்பான சரக்குகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக பயணித்த அந்த வாகனம், குன்றத்தூர் அருகே சென்றபோது திடீரென பழுதாகி நின்றது.

இதையடுத்து வேன் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி, சாலையோரத்தில் நின்றிருந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதி தாக்கியதில் வேன் தலைகுப்புற கவிழ்ந்து சேதமடைந்தது.

வேனில் இருந்த குளிர்பான சரக்குகள் சாலையில் சிதறி விழுந்தன. அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து சரக்குகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து காரணமாக வெளிவட்ட சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் மீட்பு பணியாளர்கள் இணைந்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.