இடிந்து விழும் அபாயத்தில் வடகடம்பாடி பேருந்து நிழற்குடை

0
1

மாமல்லபுரம் அருகே உள்ள வடகடம்பாடி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் திருக்கழுக்குன்றம் – மாமல்லபுரம் நெடுஞ்சாலையோரத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் பயன்பாட்டிற்காக ஒரு நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக சரியான பராமரிப்பு இல்லாததால் அந்த நிழற்குடை தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

நிழற்குடையின் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் பெரிய விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. மேலும் செடி, கொடிகள் முளைத்து அந்த பகுதி முழுவதும் அலங்கோலமாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த நிழற்குடையை பயன்படுத்த அச்சப்படுகின்றனர்.

குறிப்பாக பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அங்கு சுற்றித் திரிவதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பாதுகாப்பு அச்சத்தில் உள்ளனர். இருந்தபோதிலும் சில முதியவர்கள் ஆபத்தை உணராமல் அந்த நிழற்குடைக்கு அருகில் நின்று பேருந்துக்காக காத்திருக்கின்றனர்.

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் உள்ள இந்த நிழற்குடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே இடத்தில் புதிய மற்றும் பாதுகாப்பான பேருந்து நிழற்குடை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.