தனியார் ஆம்புலன்சிலேயே அழுகும் சடலம்! உறவினர்கள் கதறல்!

0
4

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உடலெங்கும் வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கட்டிட மேஸ்திரியின் உடலை, உடற்கூறு ஆய்வு அறைக்குக் கொண்டு செல்லாமல் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாகத் தனியார் ஆம்புலன்சிலேயே போட்டு வைத்திருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் கொடூர அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லைப் பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதை அம்பலப்படுத்தும் விதமாக, ஒரு கொடூர மர்ம மரணமும், அதைவிடக் கொடூரமான மருத்துவமனை நிர்வாகத்தின் அவலமும் இன்று அரங்கேறியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த களியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (42). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்த இவருக்கு, மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். பாலு வழக்கம் போல் நேற்று காலை வேலைக்குச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரைப் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை களியாம்பூண்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதியில் பாலு மர்மமான முறையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக உத்திரமேரூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலுவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்குத் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் பாலுவின் உடலின் பல்வேறு இடங்களில் பயங்கரமான வெட்டுக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட ஏதேனும் தகராறில் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது இதன் பின்னணியில் முன்விரோதம் ஏதேனும் உள்ளதா? என்கிற கோணத்தில் உத்திரமேரூர் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கொலை வழக்காக மாறும் இந்த விவகாரத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகமும் உத்திரமேரூர் போலீசாரும் காட்டிய மனிதாபிமானமற்ற மெத்தனம் தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இன்று காலை 8 மணிக்கே பாலுவின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், அங்குள்ள ஊழியர்களோ சடலத்தைப் பெற்றுக்கொண்டு உடற்கூறு ஆய்வு (Post-Mortem) செய்யும் குளிரூட்டப்பட்ட அறைக்குக் கொண்டு செல்லாமல், கொளுத்தும் வெயிலில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஆம்புலன்சிலேயே கிடக்கவிட்டுள்ளனர். காவல் துறையின் தரப்பிலிருந்து முறையான ஆவணப் படிவங்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட காலதாமதமும், மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியமுமே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது.

நான்கு பெண் குழந்தைகளைத் தவிக்கவிட்டுப் கணவனைப் பறிகொடுத்துவிட்டு, சடலமாவது மதிக்கப்படும் என்று காத்திருந்த பாலுவின் உறவினர்கள், மருத்துவமனையின் இந்த அராஜகப் போக்கைக் கண்டு ஆம்புலன்ஸை முற்றுகையிட்டுக் கண்ணீர் மல்கக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். புதிய தவெக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளின் இத்தகைய அவல நிலையும், ஏழை விவசாயக் கூலிகளின் சடலங்களுக்குக் கூடக் காசுக்காகவோ அல்லது அலட்சியத்தாலோ மரியாதை தராத அதிகாரிகளின் மெத்தனப் போக்கும் ஒட்டுமொத்த பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.