Home Politics எதிர்க்கட்சி தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின் ‘மாஸ்டர் பிளான்’!

எதிர்க்கட்சி தலைவராகிறாரா உதயநிதி? தவெக-வை எதிர்கொள்ள திமுக-வின் ‘மாஸ்டர் பிளான்’!

0

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளும் திமுக-விற்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள நிலையில், அக்கட்சியை மீண்டும் வலுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கத் திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், சட்டமன்றத்தில் விஜய்யை எதிர்கொள்ள உதயநிதி ஸ்டாலினே பொருத்தமானவராக இருப்பாரென அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த தேர்தலில் பலத்த சேதத்தைச் சந்தித்துள்ள திமுக, சட்டமன்றத்தில் தனது குரலை வலுவாகப் பதிவு செய்யப் புதிய திட்டங்களைத் தீட்டி வருகிறது. கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்திருப்பது அக்கட்சிக்குத் தலைமைத்துவ ரீதியாகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. அரசியல் களத்தில் அசுர வேகத்தில் வளர்ந்துள்ள விஜய்யையும், அவரது தவெக எம்எல்ஏக்களையும் சட்டமன்றத்தில் எதிர்கொள்ள உதயநிதி ஸ்டாலினின் ஆக்ரோஷமான பேச்சு மற்றும் அணுகுமுறை உதவும் எனத் திமுக தலைமை கருதுகிறது

ஒருபுறம் தவெக தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் 108 எம்எல்ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். மறுபுறம், ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டி இல்லாததால் பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், வலுவான எதிர்க்கட்சியாகச் செயல்பட உதயநிதியை முன்னிறுத்துவதன் மூலம், இளைஞர்களை மீண்டும் ஈர்க்க முடியும் எனத் திமுக நம்புகிறது.

தமிழகப் பொறுப்பு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று சென்னை வரவுள்ள நிலையில், தவெக ஆட்சி அமைக்குமா அல்லது தமிழக அரசியலில் மீண்டும் ஒரு திருப்பம் நிகழுமா என்பது அடுத்த சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

NO COMMENTS

Exit mobile version