Home Politics விஜய் ரோடு ஷோ: வேட்பாளர் உட்பட 30 பேர் மயக்கம்!

விஜய் ரோடு ஷோ: வேட்பாளர் உட்பட 30 பேர் மயக்கம்!

0

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடத்திய ரோடு ஷோ மற்றும் தேர்தல் பிரச்சாரம், மாபெரும் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. இருப்பினும், கடும் வெயில் மற்றும் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் காரணமாகச் சூலூர் தொகுதி தவெக வேட்பாளர் சுகுமாரன் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மதியம் 2 மணிக்குத் தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த விஜய், அங்கிருந்து பிரச்சார வேன் மூலம் திருப்பூர் நோக்கிப் புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கணியூர் சுங்கச்சாவடி அருகே சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமாரன், காலை 11 மணி முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் விஜய்க்காகக் காத்திருந்தார். விஜய் அங்கு வந்தபோது, அவரை நெருங்கிப் பார்க்கத் தொண்டர்கள் முண்டியடித்தனர். இந்தத் திடீர் நெரிசலில் சிக்கிய வேட்பாளர் சுகுமாரன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். உடனடியாக சக கட்சியினர் அவரை மீட்டு முதலுதவி அளித்து ஆசுவாசப்படுத்தினர்.

விஜய்யின் வருகைக்காகப் பல மணி நேரம் காத்திருந்த நிலையில், அவினாசி பகுதியில் 9 பேரும், திருப்பூர் பெருமாநல்லூரில் 20-க்கும் மேற்பட்டோரும் மயக்கமடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கூட்ட நெரிசலில் காணாமல் போன 3 குழந்தைகளைப் போலீசார் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தொண்டர்கள் மரங்களிலும், மொட்டை மாடிகளிலும் ஏறி ஆபத்தான முறையில் நின்றதால், போலீசார் அவர்களை எச்சரித்துக் கலைத்தனர்.

திருப்பூர் சாலையில் அறிவிக்கப்பட்டிருந்த ரோடு ஷோ, பாதுகாப்பு மற்றும் அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பெருமாநல்லூர் பகுதியில் சுமார் 20,000-க்கும் மேற்பட்டோர் கூடியதால், நேற்று பிற்பகல் முதல் இரவு வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது.

சூலூர் பகுதியில் விஜய் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது, கூட்டத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் சுதாமணி என்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version