Home Politics நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! அன்புமணி பிரச்சாரத்தில் பரபரப்பு!

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! அன்புமணி பிரச்சாரத்தில் பரபரப்பு!

0

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், மேட்டூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்த பகுதிக்குள் வித்யாராணி நுழைய முயன்றதால் மோதல் சூழல் உருவானது.

மேட்டூர் அடுத்த மேச்சேரி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலைத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் திடீரென அந்தப் பகுதிக்குள் நுழைய முயன்றார்.

இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க, பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் வித்யாராணியைத் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

போலீசாரின் தடையால் ஆத்திரமடைந்த வித்யாராணி, அங்கிருந்து நகர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் சாலையிலேயே அமர்ந்து அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்டது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கைது செய்யப்படுவதற்கு முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய வித்யாராணி, நாங்கள் இருசக்கர வாகனப் பேரணி நடத்த முன்கூட்டியே அனுமதி பெற்றிருந்தோம். ஆனால், அன்புமணி பிரச்சாரம் செய்கிறார் என்பதற்காக எங்களைத் தடுத்து நிறுத்தி நீண்ட நேரம் காத்திருக்க வைத்தனர். அன்புமணி ராமதாஸ் என்னைச் சிறுவயதிலிருந்தே பார்த்தவர். அந்த உரிமையில்தான் அவரிடம் முறையிடச் சென்றேன். ஆனால் அவர் ‘அப்புறம் பேசுகிறேன்’ என அலட்சியமாகச் சொல்லிவிட்டார். மற்ற வேட்பாளர்களை விட என்னைத் தான் அதிகாரிகள் அதிக சோதனைக்கு உள்ளாக்குகிறார்கள் என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்துக் காவல் துறையினர் கூறுகையில், வித்யாராணி உரிய அனுமதி பெறாமல் பிரச்சாரப் பகுதிக்குள் நுழைந்ததாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைத் தவிர்க்கவே அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின், வலுக்கட்டாயமாக அவரை அப்புறப்படுத்திய போலீசார் வித்யாராணியைக் கைது செய்தனர்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வீரப்பனின் மகளான வித்யாராணி கைது செய்யப்பட்டிருப்பது மேட்டூர் தொகுதி அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version